×

‘கடுங்குளிர்… லேசா வெயில்… என்னா… கிளைமேட்யா இது…’ குளுகுளு கொடைக்கானலுக்கு குவிந்தனர் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல் : தொடர் விடுமுறையை கொண்டாட திரளான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்து வருவதால் முக்கிய சுற்றுலா இடங்கள் நிரம்பி வழகின்றன.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது.

தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை கொண்டாட தற்போது சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப்பயணிகள் வருகையின் காரணமாக பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.

கொடைக்கானலில் அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம், முன் இரவிலும், பின் இரவிலும் கடுங்குளிர், மதிய வேளையில் லேசான வெயில் என கிளைமேட் டாப் லெவலில் இருக்கிறது. இந்த கிளைமேட்டை சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர், சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

இதனால், ஒரு சிலர் ஊர்ந்து சென்ற வாகனங்களில் அமர்ந்தபடியே இயற்கை காட்சியை கண்டுரசித்தனர். மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kodaikanal ,Dindigul district ,Christmas ,
× RELATED வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான...