*சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்
கோவை : கோவை விமான நிலையத்தில் கடந்த 6 மாதத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள 272 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்னை, பெங்களூரூ, டெல்லி, மும்பை என பல்வேறு உள்நாட்டு விமானங்களும், துபாய், சிங்கப்பூர், என வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கபட்டு வருகிறது.
அதில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம், போதை பொருட்கள், வெளிநாட்டு வளர்ப்பு பிராணிகள், டிரோன்கள், வெளிநாட்டு சிகரெட், விலை உயர்ந்த செல்போன்கள் என விலை உயர்ந்த பல பொருட்களை பயணிகள் மற்றும் குருவிகள் கடத்தி வருகின்றனர்.
இதனை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் ரகசிய தகவலின் பேரிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இவ்வாறு கடந்த 6 மாதங்களில் கோவை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்புள்ள 272 டிரோன்களை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை கடந்தி வந்த நபர்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
