அணைக்கட்டு அடுத்த ஊசூரில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 12 மணிக்கே விழாவை போலீசார் நிறுத்தியதால் வாக்குவாதம்

அணைக்கட்டு, ஜன.22: அணைக்கட்டு அடுத்த ஊசூரில் எருதுவிடும் விழாவை 12 மணிக்கே விழாவை போலீசார் நிறுத்தியதால் விழாக்குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட ஊசூர் கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு நேற்று எருதுவிடும் திருவிழா நடந்தது. வேலூர் ஆர்டிஓ கணேஷ் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் பழனி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றபிறகு விழா தொடங்கப்பட்டது. தொடர்ந்து விழா காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் ஊசூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 66 காளைகள் பங்கேற்றன. அதில் தகுதியுடைய 59 காளைகள் தேர்வு செய்யப்பட்டு, கால்நடை மருத்துவர் ரகுவின் பரிசோதனைக்கு பிறகு காளைகள் வீதியில் அவிழ்த்துவிடப்பட்டது.

அப்போது சீறிபாய்ந்து ஓடிய காளைகளை இருபுறத்திலும் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். ஒவ்வொரு காளைகளும் 4, 5 சுற்றுகள் வரை விடப்பட்டது. ஒரே மாடுகள் அதிக சுற்றுகள் ஒடிகொண்டிருந்ததால், அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா விழாவை 12 மணிக்கு நிறுத்தினார். இதைப்பார்த்த விழா குழுவினர், கிராம மக்கள் விழா நடத்த கலெக்டர் 2 மணி வரை அனுமதி அளித்துள்ளார், நாங்கள் ஒரு மணி வரை தான் நடத்துகிறோம், அதற்கு அனுமதியுங்கள் என்றனர், அதற்கு அவர் மறுத்தார். இதனால், விழா குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாடி வாசல் அருகே குவிந்த இளைஞர்கள், விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்தமாக கோஷமிட்டனர். இதனால், வேறு வழியின்றி போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து விழா 12.45 மணிக்கு முடிக்கப்பட்டது. இதில் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் காளைகள் முட்டியதில் காயமடைந்த 10 பேருக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: