×

நண்பரின் பிறந்தநாளின்போது கிணற்றில் மூழ்கி மண் எடுக்க முயன்றவர் பலி

கூடுவாஞ்சேரி: நண்பரின் பிறந்தநாள் விழாவில், கிணற்றின் மூழ்கி மண் எடுக்காமல் வராமல் வரமாட்டேன் என கூறி பந்தயம் கட்டி குதித்த வாலிபர், பரிதாபமாக பலியானார். சென்னை கேகே நகர் அடுத்த எம்ஜிஆர் நகர், நக்கீரன் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் பிரின்ஸ் (40). அங்குள்ள தனியார் கம்பெனியில் அட்மினாக பணியாற்றி வந்தார். இவரது நண்பர், கூடுவாஞ்சேரி அடுத்த பெரிய அருங்கால் கிராமத்தை சேர்ந்த மோசஸ். இந்நிலையில், நேற்று முன்தினம் மோசஸ் பிறந்தநாள் கொண்டாடினார். அதில், அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோருடன், பிரின்ஸ் உள்பட ஏராளமான நண்பர்களும் கலந்து கொண்டு, கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், நண்பர்கள் அனைவரும் மது அருந்தினர். இதில், மோசஸ் வீட்டின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் 20க்கும் மேற்பட்டோர், போதையில் குதித்து விளையாடினர். அப்போது, பிரின்ஸ் கிணற்றின் ஆழத்தில் உள்ள சேற்று மண்ணை எடுத்து  வருவதாக தனது நண்பர்களிடம் பந்தயம் கட்டினார்.

இதில், 2 முறை முயன்றும் மண் எடுக்கவில்லை. இதனால், நண்பர்கள் கிண்டல் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த பிரின்ஸ் மண் எடுக்காமல், வெளியே வரமாட்டேன் எனறு கூறி 3வது முறையாக கிணற்றில் குதித்தார். பின்னர் அவர், வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதையொட்டி அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, தண்ணீரில் மூழ்கிய பிரின்சை சடலமாக மீட்டனர். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார், சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : well ,birthday ,
× RELATED கிணற்றில் விழுந்த முதியவர் பலி