முதல்வர் பிரசார கூட்டத்துக்கு சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்து பலி: சிங்கபெருமாள் கோயில் அருகே பரபரப்பு

செங்கல்பட்டு, ஜன.21: முதல்வர் பிரசார கூட்டத்துக்கு சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தவர், செங்கல்பட்டு மாவட்டம், சிங்க பெருமாள் கோயில் சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரசாரம் செய்தார். அப்போது, இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் மக்கள் தொகை அதிகளவில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்களை அழைத்து வந்தனர். இரவு 9 மணியளவில், பொதுக்கூட்டம் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி, அதே பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இரவு தங்குவதற்காக புறப்பட்டு சென்றார். மக்கள் கூட்டமும் குறைய தொடங்கியது. இதற்கிடையில், முதல்வர் கூட்டம் நடத்தப்பட்டதால், சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும், நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இந்நிலையில், கூட்டத்தில் இருந்து நடந்து சென்ற ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், அங்கிருந்த மக்கள், அவரை மீட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போக்குவரத்து நெரிசல் இருந்ததால், வேகமாக செல்ல முடியவில்லை. பின்னர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை, பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அந்த பெண் இறந்துவிட்டதாக கூறினர்.

தகவலறிந்து, மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அதில், சிங்கபெருமாள் கோயில், பெரியார் நகர், விஞ்சியம்பாக்கத்தை சேர்ந்தவர் வேம்பு. இவரது மனைவி புனிதவள்ளி (60). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, கணவன் வீட்டில் வசிக்கின்றனர். கடந்த 6 மாதத்துக்கு முன், உடல்நிலை பாதித்து வேம்பு இறந்தார். தற்போது, முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்ட புனிதவள்ளி, மூச்சு திணறல் காரணமாக இறந்தார் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>