ஆரணி பேரூராட்சியில், 6 வருடங்களாக கிடப்பில் பஸ் நிலையம் கட்டும் பணி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, ஜன. 21: ஆரணி பேரூராட்சியில், 6 வருடங்களுக்கு முன்பு பஸ் நிலையம் கட்ட இடம் ஒதுக்கியதாக கூறப்படும் நிலையில், பணி இதுவரை துவங்கவில்லை. எனவே, பஸ் நிலையம் கட்டும் பணி துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் என 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள், விவசாய வேலையாகவும், வியாபார சம்மந்தமாகவும், பள்ளி,  கல்லூரிகளுக்கு சென்னை,  திருவள்ளூர், கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும்.

ஆரணி பேரூராட்சிக்கு அரசு பஸ்கள்,  மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் கோயம்பேடு, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி,  கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்து செல்கிறன்றன. ஒரு நாளைக்கு பஸ்கள், கனரக வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆரணி வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில், ஆரணி வழியாக செல்லக்கூடிய பஸ்கள் பெரியபாளையம் - புதுவாயல் நெடுஞ்சாலையில் ஆரணி காவல் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் சாலை ஓரத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. இதனால், கனரக வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் செல்லும் போதும்  இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ஆரணியில் உள்ள பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.  

எனவே, ஆரணி பேரூராட்சியில் பஸ் நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆரணி பேரூராட்சியில் விவசாயிகளும், நெசவாளர்களும் அதிக அளவு வசித்து வருகிறார்கள். மேலும், ஆரணியை சுற்றி போந்தவாக்கம், மங்களம், மல்லியங்குப்பம், மாதவரம், காரணி, புதுப்பாளையம், திருநிலை, அக்கரப்பாக்கம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆரணிக்கு வந்துதான் இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டும்.

இவர்கள், பஸ்சுக்காக ஆரணி வந்து சாலையின் ஓரத்திலேயே நின்று காத்திருந்து செல்லவேண்டியுள்ளது. இவர்களின், வசதிக்காக ஆரணி பேரூராட்சியில் பஸ் நிலையம் கட்டுவதற்காக கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ஆரணி அரசு மேல்நிலை பள்ளி அருகில் இடம் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.  ஆனால், இதுவரை இன்னும் பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கவில்லை. மேலும், பஸ் நிலையம் கட்டுவது குறித்து பேரூராட்சி மன்ற  கவுன்சிலர்கள் கூட்டத்தில் அப்போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  எனவே, ஆரணியில் விரைவில் பஸ் நிலையம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Related Stories:

>