வேட்டவலம் அருகே கிராம மக்கள் பீதி: மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி தண்டோரா போட்டு எச்சரிக்ைக

வேட்டவலம், ஜன.21: வேட்டவலம் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பரிதாபமாக பலியாகியுள்ளன. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆணானந்தல் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(45), விவசாயி. இவர் 21 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு பின்னர், தனது வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்தார்.

நேற்று அதிகாலை பட்டியில் இருந்து ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த வேல்முருகன், அங்கு சென்று பார்த்தார். அப்போது, 4 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது.

இதுகுறித்து மதுராம்பட்டு விஏஓ விக்ரம் அளித்த தகவலின்பேரில், அண்டம்பள்ளம் கால்நடை மருத்துவ அலுவலர்(பொறுப்பு) ராஜேஸ்வரி, எஸ்ஐ வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள், ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறியதில் ஆடுகள் இறந்ததாக தெரிவித்தனர். மேலும், சில நாட்களுக்கு முன்பும் அதே பகுதியில் அடுத்தடுத்து மர்ம விலங்கு கடித்து குதறியதில் 24 ஆடுகள் பலியானதாகவும் தெரிவித்தனர். தற்போது 3வது முறையாக ஆடுகள் பலியான சம்பவத்தால் அதனை வளர்ப்போர் கடும் பீதியடைந்துள்ளனர்.

மேலும், ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்கை பொறி வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சமூர்த்தி ஏற்பாட்டின்பேரில், கால்நடைகளை வளர்ப்போர் இரவு நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தண்டோரா போட்டு கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories:

>