×

தென்னையை பாதிக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

வேலூர், ஜன.21: கே.வி.குப்பம் வட்டாரத்தில் தென்னையை பாதித்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் கண்டறியப்பட்ட பகுதியில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டாரத்தில் உள்ள அம்மணாங்குப்பம் கிராமத்தில் கடந்த 18ம்தேதி தென்னையில் வெள்ளை ஈ தாக்கம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், வேளாண்மை இணை இயக்குனர் தீட்சித், கே.வி.குப்பம் வேளாண்மை உதவி இயக்குனர் வினித்மேக்டெலின், உதவி பேராசிரியர் சசிகுமார் ஆகியோர் பார்வையிட்டு இதனை கட்டுப்படுத்தும் முன்னேற்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

தென்னையில் தாக்கப்பட்ட இலைகளின் உட்பகுதியில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும். முட்டைகளை மெழுகு போன்று வெள்ளை நிற துகள்கள் மூடியிருக்கும். இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் சாற்றை உறிஞ்சுகின்றன. வெள்ளை ஈக்களால் வெளியேற்றப்படும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட அடுக்கு இலைகளின் மேல் பகுதியில் விழுந்து பரவுகின்றன. கரும்பூசணம் வளர்வதால் தென்னை ஓலைகள் தற்காலிகமாக கருப்பு நிறமாக மாறிவிடும். ஒளிசேர்க்கை தற்காலிகமாக பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி விடுகிறது. பாதிக்கப்பட்ட இலைகள் மீது எறும்புகளை காணலாம். வெள்ளை ஈக்களின் தாக்குதலால் மகசூல் பெருமளவில் பாதிக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: விளக்கு பொறியை ஒரு ஏக்கருக்கு 2 வீதம் இரவில் 7 முதல் 11 மணி வரை வைத்து இரவில் பறக்கும் வெள்ளை ஈக்களை கண்காணித்தும் கவர்ந்து அழிக்கலாம்.

மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை (3 அடி நீளம் 1.5 அடி அகலம்) அல்லது (6 அடிக்கு 1.5 அடி) ஏக்கருக்கு 10 வீதம் 6 அடி உயரத்தில் வைக்கவும் அல்லது தென்னை மரங்களின் தண்டுப் பகுதியில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை அடி உயரத்தில் சுற்றி வைக்கவும்.
தண்ணீரை பீச்சி அடித்தல் மூலம் தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட ஓலைகளில் உட்பகுதியில் படுமாறு விசைத்தெளிப்பான் கொண்டு மிக வேகமாக தண்ணீரை தெளிப்பதன் மூலமாகவும் ஈக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

என்கார்சியா ஒட்டுண்ணிகள் விடுதல் 100 எண்ணம் ஏக்கருக்கு, ஏக்கர் என்கார்சியா ஒட்டுண்ணி குளவி, கூட்டுப்புழு பருவத்தை உள்ளடக்கிய தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது 10 மரம் இடைவெளியில் வைத்து கட்டுப்படுத்தலாம். கிரைசோபிட என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி இறை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 300 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலால் ஏற்படும் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த மைதா மாவு பசை கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் 25 கிராம், ஒட்டும் திரவம் 1 மில்லி சேர்த்து கீழ் இலை அடுக்குகளில் படிந்திருக்கும் கரும்பூசணங்களின் மேல் நன்றாக படுமாறு தெளிக்கவும். மைதா மாவு பசை தெளித்த 3 முதல் 5 நாட்களில் இலைகளில் படிந்திருந்த கரும்பூசணங்கள் வெயிலில் காய்ந்து உதிர்ந்துவிடும்.

வேப்ப எண்ணெய் 10 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு (அல்லது) 5 மில்லி ஒரு லிட்டருக்கு தண்ணீர் கலந்து தெளித்து பூச்சியைக் கட்டுப்படுத்தலாம் செயற்கை பைரித்திராய்டு மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகளை நன்மை செய்யும் பூச்சிகளை அழித்து விடுவதால் அவற்றை அறவே பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : agronomists ,
× RELATED நீலகிரிக்கு பாலைவன வெட்டுக்கிளிகள்...