கால்நடை வளர்ப்போருக்கு தீவனப்பயிர் விதைகள் கால்நடை மற்றும் வேளாண்துறை வினியோகம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில்

வேலூர், ஜன.21: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 20 ஒன்றியங்களில் கால்நடை வளர்ப்போருக்கு தடையின்றி கால்நடைகளுக்கான தீவனம் கிடைக்கும் வகையில் தீவனப்பயிர் வளர்ப்புக்கு விதைகள் வினியோகிக்க கால்நடை மற்றும் வேளாண்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நடப்பு 2020-21ம் நிதி ஆண்டில் கால்நடைத்துறையால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், 50 மற்றும் 75 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் கறவை மாடுகள், நாட்டுக்கோழிகள் ஆகியவற்றுக்கான தீவனத்தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் தீவனப்பற்றாக்குறையின்றி கிடைக்கும் வகையிலும் தீவனப்பயிர் உற்பத்தி திட்டங்களுக்கு வேளாண்துறையும், கால்நடைத்துறையும் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அதன் அடிப்படையில் 2020-21ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் 60 டன் சோளவிதை, 20 டன் தட்டை பயறு விதைகள் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு 1/4 ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரை விதைகள் வழங்கப்படுகிறது. இரவை நீடித்த பயிர் செய்தல் திட்டத்தில் 640 விவசாயிகளுக்கு 1 மினி கிட் விதை தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் என்பி21 கம்பு தீவன புல் குச்சிகள் 4 சென்டில் விதைக்கும் அளவுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் 1 சென்ட் தீவன மக்காச்சோளம் விதைகள் 160 கிராம் வீதம் கொண்ட 2 பாக்கெட்டுகளும், 2 சென்ட் தீவன சோளம் கோ எப்எஸ் 29 விதைகள் 40 கிராம் வீதம் ஒரு பாக்கெட்டும் எல்லா சீசனிலும் விதைக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

தீவன தட்டை பயறு விதை 120 கிராம் வீதம் 4 பாக்கெட்டுகள் வீதம் 1 1/2 சென்ட் நிலத்துக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் 10 சென்ட் பரப்புக்கு 120 கிராம் வேலி மசால் விதை 1 பாக்கெட் வீதம் 450 பயனாளிகளுக்கு தலா ஒரு ஏக்கருக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டு முழுவதும் எல்லா சீசனிலும் தீவன பற்றாககுறையின்றி தீவன உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் நீடித்த பசுந்தீவன வளர்ப்பு திட்டத்தில் இரவை பசுந்தீவன வளர்ப்பில் ஒரு ஏக்கருக்கு 1.5 கிலோ தீவன சோளம், 2 கிலோ வேலி மசால் விதைகள் ஆயிரம் ஏக்கருக்கு விதைகள் வினியோகிக்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு 1/4 ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரை வழங்கப்படுகிறது.

இதுதவிர மேய்ச்சல் புறம்போக்கு நில மேம்பாடு திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 50 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு அகத்தி, சூபா புல், முள்முருங்கை, வேம்பு, முருங்கை, ஸ்டைலோ தீவனப்புல், வேலிமசால் விதைகள் வழங்கப்படுகிறது. இதற்காக ஏக்கருக்கு ₹16,750 நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் 3 மாவட்டங்களில் 20 ஒன்றியங்களிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்ட பணியாளர்களை கொண்டு செயல்படுத்தப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>