2 வீடுகளில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கைவரிசை கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

நாமக்கல், ஜன.21: நாமக்கல் அருகே, 2 வீடுகளில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி தெரிவித்துள்ளார். நாமக்கல்லை அடுத்த வீசானத்தில் சின்னுசாமி, ஓட்டைகுளம்புதூரில் ரவிக்குமார் ஆகிய இருவரது வீடுகளில் நேற்று முன்தினம் அதிகாலை 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்தனர். அப்போது வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, 20 பவுன் நகை, ₹10 ஆயிரம், வெள்ளிகொலுசு, செல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை  கொள்ளையடித்து சென்றனர்.இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணையில்,இருவரது வீட்டிலும் கொள்ளையடித்தது ஒரே நபர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களா, அல்லது வெளி மாவட்டத்தை சேர்ந்த கொள்ளை கும்பலா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.4 பேரும் முகத்தை முக மூடியால் மூடியிருந்ததால், அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் இவர்கள் கொள்ளையடித்து விட்டுசென்ற வழியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து 4 பேர் கும்பலை பிடிக்க நாமக்கல் டிஎஸ்பி காந்தி 3 தனிப்படையை அமைத்துள்ளார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கிரைம் எஸ்ஐ வேலுசாமி, எஸ்எஸ்ஐ அருணாசலம் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். கொள்ளை நடந்த வீட்டில் இருந்தவர்கள், அருகாமையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம்  விசாரணை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.கொள்ளை நடந்த இருவர் வீட்டிலும் தலா ஒருவர் லாரி டிரைவராக இருக்கிறார். அவர்கள் தற்போது வெளி மாநிலங்களுக்கு லோடு ஏற்றிச் சென்றுள்ளனர்.எனவே இவர்களுடன் பழகிய நபர்கள் தான் திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

Related Stories: