சென்னை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 6,100 கிலோ எடை கொண்ட அமெரிக்காவின் புளூபேர்ட் செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் ‘பாகுபலி’ ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புறப்பட்ட சுமார் 16 நிமிடங்களில் திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் செயற்கைக்கோள் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் இதுவரை 430க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு பங்களித்து வரும் இஸ்ரோ, வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்-6 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்) அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டது. இந்த செயற்கைக்கோள் அதிக எடை கொண்டது என்பதால், இந்தியாவின் பாகுபலி ராக்கெட்டான எல்விஎம் 3 மூலம் விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ முடிவு செய்தது.
இந்த ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம் 3 எம்-6 ராக்கெட் நேற்று காலை 8.55 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளிக் கழிவுகள் இடையேயான மோதலை தவிர்க்க ராக்கெட் 90 வினாடிகள் தாமதமாக ஏவப்பட்டது.
தரையில் இருந்து புறப்பட்ட சுமார் 16 நிமிடங்களில் ராக்கெட், திட்டமிட்ட சுற்றுப்பாதையில் புளூபேர்ட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த வெற்றியின் மூலம் 1993ம் ஆண்டு முதல் இதுவரை 34 வெளிநாடுகளை சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வாயிலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட் செயற்கைக்கோள் சுமார் 6,100 கிலோ எடை கொண்டது.
விண்வெளியில் இருந்து நேரடியாக செல்போன்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இதன் பிரதான நோக்கம். இதன்மூலம் சிக்னல் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெறமுடியும். மேலும், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோளாகும். இதனால் சர்வதேச சந்தையில் இஸ்ரோவின் மதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: எல்.வி.எம் 3 பாகுபலி ராக்கெட் திட்டமிட்டபடி புளு பேர்ட் செயற்கைக்கோளை புவிவட்ட பாதையில் மிகத் துல்லியமாக வெற்றிகரமாக நிலைநிறுத்தியதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி ஸ்பேஸ் மொபைல் நிறுவனத்திற்கான முதல் முழுமையான வர்த்தக விண்வெளி ஏவுதல் இது.
இந்தச் சிறப்பான சாதனைக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 104வது ஏவுதல் இது ஆகும். மேலும், எல். வி.எம் 3 ஏவுகணையின் 9வது தொடர்ச்சியான வெற்றிகரமான பயணம் இதுவாகும். இதன் மூலம் எல். வி.எம் 3 ஏவுகணம் 100 சதவீத நம்பகத்தன்மையைக் காட்டியுள்ளது. இன்றைய பயணம், இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.
ஏற்கெனவே, சந்திரயான்-2, சந்திரயான்-3, ஒன்வெப் பயணங்கள் மற்றும் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் போன்ற பல்வேறு வெற்றிகரமான பயணங்களை எல்விஎம் 3 மேற்கொண்டுள்ளது. முற்றிலும் வணிக ரீதியாக அனுப்பக்கூடிய இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தக்கூடியது. 1963ம் ஆண்டு நவம்பர் 21ம்தேதி இஸ்ரோ தொடங்கியபோது பயிற்சி ராக்கெட்டை, அமெரிக்காவின் ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பினோம்.
அப்போது, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது 60 ஆண்டுகளுக்கு நாம் பின் தங்கியிருந்தோம். இப்போது இஸ்ரோ அசுர வளர்ச்சி அடைந்து 6 ஆயிரம் கிலோவிற்கு மேல் எடை கொண்ட அமெரிக்காவின் செயற்கைக்கோளை தற்போது இந்தியா அனுப்பி உள்ளது. இதுவரை 34 நாடுகளை சேர்ந்த 434 வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது.
சந்திரயான்-4 திட்டம் நிலவில் செயற்கைக்கோளை இறக்கி அங்கிருந்து மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டமாகும். இதனை 2027 இறுதிக்குள் செயல்படுத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் வீரர்களை விண்ணெளிக்கும் அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பாக 9000 சோதனைகளை மேற்கொண்டு உள்ளோம். அதனையும் விரைவில் வெற்றிகரமாக செய்து முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
* இஸ்ரோவிற்கு அமெரிக்க நிறுவனம் நன்றி
அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை தொடர்ந்து ஏ.எஸ்.டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தி பூஷன் குப்தா கூறுகையில், ‘‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக விண்ணில் வெற்றிகரமாக செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் 40 முதல் 50 வரை செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இதில் இஸ்ரோவின் பங்கு அளப்பரியதாக இருக்கும். மேலும் இதற்காக 21 மில்லியன் முதலீடு செய்ய உள்ளோம்,’’ என்றார்.
* இஸ்ரோவுக்கு பிரதமர் பாராட்டு
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், ‘‘எல்விஎம்-3 ராக்கெட்டைப் பயன்படுத்தி அதிக எடையுள்ள செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதன் மூலம், எதிர்கால திட்டமான ககன்யானுக்கான அடித்தளம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரோவுக்கு பாராட்டுகள். எல்விஎம்-3 ராக்கெட்டின் வெற்றி, உலகளாவிய வணிக ஏவுதள சந்தையில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை வலுப்படுத்தியுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
* 10 செயற்கைக்கோள்களை அடுத்த ஆண்டு ஏவ திட்டம்
விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் படி அடுத்தாண்டு 5 பிஎஸ்எல்வி, எச்ஏஎல்எல் அன் டி மூலம், நேவிக் செயற்கைக்கோள்கள், எஸ்.எஸ்.எல்.வி மற்றும் ஸ்கை ரூட் தனியார் செயற்கைக்கோள்கள் உள்பட 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளோம்.
* 90 நிமிடம் தாமதம் ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்
நேற்றைய தினம் ஏவப்பட்ட எல்விஎம் மார்க் 3 ராக்கெட் காலை 8.54 மணிக்கு விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டப்பட்டது. ஆனால் 90 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில்ல ‘‘வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, ஏவுதளப் பாதை பாதுகாப்பின்மை அல்லது பேலோடு தயார்நிலை போன்ற காரணங்களால் இதுபோன்ற தாமதம் ஏற்படுவதுண்டு.
இதனால்தான் எல்விஎம் -3 ராக்கெட் ஏவுதலில் 90 வினாடிகள் தாமதமானது, விண்வெளியில் இதற்கு முன் ஏவப்பட்டு செயலிழந்து சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கை கோள்களுடன் மோதுவதைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது,’’ என்றார்.
