×

பெங்களூருவில் வசதியானவர்கள் வசிக்கும் குடியிருப்பில் தனியாக வசித்த பெண்ணை 5 நண்பர்கள் சந்தித்தது தப்பா?.. ரூ.62 லட்சம் நஷ்டஈடு கேட்டு சங்க நிர்வாகிகள் மீது வழக்கு

 

பெங்களூரு: பெங்களூருவில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து மிரட்டிய குடியிருப்போா் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக இளம்பெண் ஒருவர் ரூ.62 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசதியானவர்கள் வசிக்கும் குடியிருப்பில் 22 வயதான இளம்பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு இவரது வீட்டில் 5 ஆண் நண்பர்களுடன் இவர் அமைதியாக உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குடியிருப்போா் சங்க நிர்வாகிகள் சிலர், ‘திருமணமாகாதவர்கள் இங்கு வசிக்க அனுமதியில்லை’ என்று கூறி தகராறு செய்துள்ளனர்.

மேலும், அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்து போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாகப் பொய்யான குற்றம் சாட்டி, மறுநாளே வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட போதும், அந்தப் பெண் தனது வீட்டில் தவறு ஏதும் நடக்கவில்லை என்று கூறி தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்குள் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அந்தப் பெண் கட்டட உரிமையாளரிடம் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் அத்துமீறிய நிர்வாகிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அவர்களுக்குத் தலா ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டு மன்னிப்பு கடிதமும் பெறப்பட்டது.

இருப்பினும், இத்துடன் விட்டுவிடாத அந்தப் பெண், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல், அத்துமீறல் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக அந்த நிர்வாகிகளுக்கு எதிராக ரூ.62 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவர்கள் தன்னைத் தொடர்பு கொள்ளக் கூடாது என நிரந்தரத் தடை உத்தரவும் கோரியுள்ளார். அத்துமீறும் சங்க நிர்வாகிகளுக்கு எதிராகத் துணிச்சலாகச் செயல்பட்ட இவரை, ‘பெங்களூருவுக்குத் தேவையான உண்மையான ஹீரோ இவர்தான்’ என்று சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : Bengaluru ,Bengaluru, Karnataka ,
× RELATED மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த போது...