×

கனமழையால் நெற்பயிர்கள் சேதம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

மன்னார்குடி, ஜன.21: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யும் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் மழை நேரில் மூழ்கி சேதமடைந்து அழுகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில், சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு பாதிப்புக்குள்ளாகி உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, மன்னார்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பரவாக்கோட்டை, மகாதேவபட்டணம், உள்ளிக்கோட்டை, ஆலங்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கி சேதமடைந்த சம்பா பயிர்களை முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை எம்பியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

ஆய்வு குறித்து எம்.பி., எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கூறுகையில், பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்துள்ளது வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும். அனைத்து விதமான விவசாய கடன்களையும் பாரபட்சமின்றி முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். பயிர் காப்பீடு சம்பந்தமாக புதிதாக கணக்கெடுப்பு நடத்தி நூறு சதவீதம் இழப்பீடு பெற்றுத்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆய்வின்போது, மன்னை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மேலவாசல் தன்ராஜ், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் பரவை முத்துவேல், மாவ ட்ட பிரதிநிதிகள், உள்ளிக்கோட்டை ஊராட்சி தலைவர் பொய்யாமொழி, விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் கோவி அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ