இந்தியாவிலேயே தாய் சேய் நலம் பேணுவதில் தமிழகம் முதலிடம்

புதுக்கோட்டை, ஜன.21:தாய் சேய் நலம் பேணுவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் 126 இடங்களில் மகப்பேறு, மயக்கவியல், குழந்தைகள் நல மருத்துவர்கள் போன்ற வசதிகள் கொண்ட பிரத்யேகமான சீமாங் மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் பயனாக தமிழகத்தில் 100 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நிகழ்கிறது. இதே போன்று தமிழகத்தில் நடைபெறும் ஒட்டுமொத்த பிரசவங்களில் 62 சதவீதத்திற்கும் மேல் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. இது தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் 30 சதவீதம் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சீமாங் மையங்களில் 53.32 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6,460 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தில் புதிதாக பிறந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 70 ஆயிரம் பச்சிளங் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் நல்லமுறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளனர். மகப்பேறு தாய் சேய் நலத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக பிறமாநிலங்களில் தாய் இறப்பு விகிதம் 113ஆக உள்ளது.

தமிழகத்தில் தாய் இறப்பு விகிதம் 1 லட்சத்திற்கு 60 ஆக உள்ளது. குழந்தை இறப்பு விகிதம் இந்திய அளவில் 32 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 17லிருந்து 16ஆக குறைந்து, தற்பொழுது 15ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது உலகளவிலான மகத்தான சாதனையாகும். தமிழகத்திற்கு இன்று (நேற்று) 5.08 லட்சம் வாக்சின் கூடுதலாக வரப்பெற்றுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும் என்றார்.

Related Stories: