அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி தொடர் மழையிலும் பாதிக்காத பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி

புதுக்கோட்டை, ஜன. 21: தொடர் மழையிலும் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதிக்கப்படவில்லை. எக்டேருக்கு 8006 கிலோ மகசூல் பெற்று விவசாயி சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கத்தக்குறிச்சி ஊராட்சி நம்புகுழியை சேர்ந்த சுப்ரமணியம் தனது 25 ஏக்கர் பண்ணையில் 10 ஏக்கருக்கு கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா, தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல்வகைகளை சாகுபடி செய்து வருகிறார். இந்தாண்டு ஒரு எக்டேருக்கு ஆத்தூர் கிச்சடி சம்பா சாகுபடியில் 8006 கிலோ நெல் மகசூல் பெற்றுள்ளார். மேலும் பாரம்பரிய நெல் ரகங்கள் கனமழையிலும் பெரிதும் பாதிப்படையவில்லை. மீதமுள்ள பரப்பில் தென்னை, மலைவேம்பு, செம்மரம் போன்ற மரப்பயிர்களிடையே கற்பூரவல்லி, செவ்வாழை, ரஸ்தாளி போன்ற வாழை ரகங்களை ஊடுபயிராக பயிரிட்டுள்ளார். மேலும் அவர்களுடைய இயற்கை பண்ணை ஆடு, மாடு, கோழி, புறா, வாத்து, மீன் என அனைத்து உயிரினங்களும் அடங்கிய ஒரு ஒருங்கிணைந்த பண்ணைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

இவர் சாண எருவுடன் வாழைமட்டை உட்பட்ட பண்ணை கழிவுகளை மக்க வைத்து வயலுக்கு தேவையான கம்போஸ்ட் தயாரித்து வருகிறார். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், எருக்கு, பலா, ஊலாங்குடி, கள்ளி, நொச்சி, வேம்பு, இடித்த மஞ்சள் சேர்த்து தயாரித்த பூச்சி விரட்டியை பயன்படுத்தி வருகிறார். மேலும் தனக்கு தேவையான பஞ்ச கவ்யாவையும் தயாரித்து பயன்படுத்தி வருகிறார். தென்னை மரங்களுக்கு மக்கிய சாண எருவுடன் எருக்கிலையும் சேர்த்து உரமாக பயன்படுத்தி வருகிறார். எருக்கிலை அதிக பாஸ்பரஸ் சத்து கொண்டதாகும்.

இன்று வீட்டிலும், நாட்டிலும் பெருமளவு உடல் உபாதைகள் மற்றும் வன்முறை பெருகி வருவதற்கு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை உண்பதே மிகப்பெரிய காரணமாகும். எனவே அனைவரும் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்பது இன்றைய காலத்தின் அவசியமாகும் என்று சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் வேளாண் பெருமக்கள் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறையில் தங்கள் பண்ணைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Stories: