இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு வழிமுறை கடைபிடிக்கப்படுகிறதா? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

புதுக்கோட்டை, ஜன. 21: புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். கொரோனா ஊரடங்குக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வந்துள்ளனரா, சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறையில் அமர்ந்துள்ளனரா என்று பார்வையிட்டார். மேலும் கொரோனா விடுமுறையில் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்வையிட்டு மாணவர்கள் குறிப்பெடுத்து படித்தார்களா என்று அவர்களின் பாட நோட்டுகளை வாங்கி பார்த்தார்.

பின்னர் கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமி நாசினி போதுமான அளவில் வாங்கி வைக்கப்பட்டுள்ளதா, மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்தார். இதையடுத்து கோவிட் 19 தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார். மேலும் மாணவர்கள் வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகளை உரிய முறையில் சாப்பிடுகிறார்களா என்று அவரது பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

Related Stories: