பயிர் காப்பீட்டுத்தொகை பெற்று தருவதாக இடைதரகர்கள் வந்தால் புகார் தெரிவிக்கலாம்

நாகை, ஜன. 21: இடைதரகர்கள் இல்லாமல் பாதித்த பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும். காப்பீட்டுத்தொகை பெற்று தருவதாக இடைதரகர்கள் வந்தால் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாகை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களை மாநில குழுவினர் நேற்று பார்வையிட்டனர். ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரவீன்பிநாயர் கூறியதாவது: ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் புரெவி புயல் காரணமாக 82,385 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் சேதமடைந்தது. இவ்வாறு சேதமடைந்த பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில் 1.45 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் நிவாரணத்தொகை கிராம வாரியாக நிர்ணயம் செய்து நிவாரணம் வழங்கும் பணி கடந்த 7ம் தேதி துவங்கப்பட்டது. இதுவரை 1.29 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு வங்கி கணக்கு எண் பதிவு செய்வதால் ஏற்பட்டுள்ள சிறு சிறு தவறுகள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இவை சரி செய்யப்பட்டு ஒரு வாரத்துக்குள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். புரெவி புயலை தொடர்ந்து எதிர்பாராதவிதமாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் துவங்கி ஜனவரி மாத தொடக்கத்தில் அதிகளவு மழை பெய்ததால் அறுவடை நிலையில் இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டது. பாதிப்பின் தன்மை, சேதமடைந்த விபரங்கள் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலக் குழு, பயிர் சேத விபரங்கள் ஆய்வு செய்ய வந்துள்ளது. அனைத்து கிராமங்களிலும் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதேபோல் மற்றொரு பணியாக காப்பீட்டு நிறுவனமானது நேற்று முதல் மாவட்டத்தில் 1,200 இடங்களில் அறுவடை பணிகளை களஆய்வு செய்கிறது. இந்த ஆய்வில் புள்ளியல்துறை, வேளாண்மைத்துறை, காப்பீட்டு நிறுவனம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து பணிகளும் கண்காணிக்கப்படுகிறது. பயிர் காப்பீட்டுத்தொகை பெற்று தருவதாக இடைதரகர்கள் வந்தால் அவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: