இறுதி பட்டியல் வெளியானாலும் வாக்காளரிடமிருந்து மனு பெறப்படும் கலெக்டர் தகவல்

சிவகங்கை, ஜன.21: சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான மனுக்கள் தொடர்ந்து பெறப்படும் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார். இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது: சுருக்க திருத்தப்பணிகள் முடித்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டதால் இனிமேல் மனுக்கள் பெறமாட்டார்கள் என எண்ண வேண்டாம். தொடர் திருத்தம் என்ற பணியின் அடிப்படையில் வாக்காளர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நீக்கம் தொடர்பான புதிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் கொரோனா வைரஸ் நோய் பரவுவதலை கருத்தில் கொண்டு ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குப்பதிவு மையங்களை பிரித்து கூடுதல் வாக்குப்பதிவு மையம் அமைக்க பரிசீலனை செய்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் உடனடியாக வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் மார்க்கிங் பண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர் என்று பேசினார்.

Related Stories: