மழையால் விவசாயம் பாதிப்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் போகலூர் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

பரமக்குடி, ஜன.21: தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்திய குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் ராமசாமி தேன்மொழி, காளீஸ்வரி ஆகியோர் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேசினார்கள்.

அப்போது, ஒன்றிய அதிகாரிகள் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் சென்று அங்கு நடைபெறும் அரசு திட்ட பணிகளை பார்வையிட்டு நல்ல முறையில் பணிகள் செயல்பட வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்திய குணசேகரன் பேசும்போது, ‘‘மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, போகலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த திட்டத்தை ஒன்றிய அதிகாரிகள் அவ்வப்போது சென்று பார்வையிட்டு தொய்வின்றி சிறப்பான முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறுங்காடுகள் வளர்ந்து செழித்தால் அந்த பகுதிக்கு நல்ல மழை பெய்யும். தற்போது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக போகலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நெல்,மிளகாய் மற்றும் நவதானிய பயிர்கள் அழிந்து போய் விட்டது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஆகவே, ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அதற்கு விவசாய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த கூட்டத்தில் வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என கூறினார். இறுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லம்மாள் நன்றி கூறினார்

Related Stories: