கரூர் மாவட்டத்தில் 25ம் தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்

கரூர், ஜன. 21: கரூர் மாவட்டத்தில் 25ம்தேதி ராகுல்காந்தி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: வரும் 25ம்தேதி ராகுல்காந்தி கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய அணி மாபெரும் வெற்றி பெறுவதற்காக முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் பயணம் செய்கிறார். இறுதியாக கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.இந்த சுற்றுப்பயணத்தில் மிக முக்கியமான விசயம், விவசாயிகளின் பிரச்னையை தீர்ப்பதற்காக விவசாய மக்களுடன் கலந்துரையாடுகிறார். நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்னை இருக்கின்ற போது, குறிப்பாக பாஜகவின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் திரண்டிருக்கிற போது, அதை மையப்படுத்தி அவர்களுக்கு பெரிய ஆதரவு அளிப்பதற்காக கரூரில் விவசாயிகளிடையே பேசுகிறார். சிறுபான்மை மக்களுக்கான நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 6 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் எம்பி ஜோதி ஆகியோர் இணைந்து ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனர். அதற்கான பணிகளை பார்வையிட நாங்கள் வந்தோம் என்றார்.பேட்டியின் போது, அகில இந்திய பொதுச் செயலாளர் சஞ்சய்தத், கரூர் எம்பி ஜோதிமணி உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

Related Stories: