×

70 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேருடன் பிடுங்கி மீண்டும் வனப்பகுதியில் நடப்பட்டது

அந்தியூர் : அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் ரோட்டில் ராமலிங்கபுரத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தின் வேர்களால் அருகே உள்ள வீடுகளின் சுவர்களிலும், கான்கிரீட் சாலைகளிலும் செடிகள் வளர்ந்து இருந்தன.

இதனால், வீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால் அரச மரத்தை வெட்டி அகற்ற அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், வருவாய்த்துறை அனுமதியுடன், வனத்துறையினர் அந்த மரத்தை வேருடன் பிடுங்கி அத்தாணி அருகே உள்ள பொன்னாச்சி அம்மன் கோயில் வனப்பகுதியில் நட முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மரத்தை வேருடன் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 6ம் தேதி மரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி அகற்றினர். பின்னர், வெட்டிய பகுதியில் மீண்டும் துளிர் விடுவதற்காக அரச மரத்தை பாதுகாத்து வந்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தன்னார்வ அமைப்புடன் மரத்தை வேருடன் பிடுங்கி அகற்றினர். பின்னர், மரம் ராட்சத கிரேன் மூலம் பொன்னாச்சி அம்மன் கோயில் வனப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து, அங்கு நேற்று காலை ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குழி தோண்டப்பட்டு, மீண்டும் வளர்வதற்கான பாதுகாப்பு முறைகளுடன் மரம் வேருடன் நடப்பட்டது.

ஒரு இடத்தில் இருந்து பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்ட மரத்தை வனத்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கண்காணித்து வர உள்ளனர்.

Tags : Anthiyur ,Ramalingapuram ,Atthani Chembulichampalayam Road ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி...