நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க திருவாடானை பகுதியில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

திருவாடானை, ஜன.21:  மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்தது. பாதிக்கப்பட்ட விளைநிலங்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாய செலவுகள் அனைத்தையும் செய்து முடித்து அறுவடைக்கு தயாராக நெற் கதிர்கள் விளைந்து உள்ளது. இந்நிலையில் காலம் கடந்து கதிர் அறுவடை செய்யும் சமயத்தில் கடுமையாக மழை பெய்து விட்டது.

இதனால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் தொடர் மழை காரணமாக மழை தண்ணீர் வெளியேற வழியில்லாமல் வயலில் தேங்கி விட்டது. இதனால் விளைந்த கதிர்கள் அனைத்தும் கீழே சாய்ந்து திரும்ப முளைத்து விட்டது. திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் ஹெக்டேர் நெல் கதிர்கள் வீணாகி விட்டது. விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கலெக்டர் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஊர் ஊராகச் சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து வேளாண்மை துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு பாதிக்கப்பட்ட விளைநிலங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இன்னும் ஐந்து நாட்களுக்குள் கணக்கெடுக்கும் பணியை முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விளைநிலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>