7 கல்குவாரிகள் ரூ.5.61 கோடிக்கு ஏலம்

மதுரை, ஜன.21: மதுரை மாவட்டத்தில் முறைகேடு தொடர்பாக 125க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கான கட்டுமானபணி, அரசு திட்டப்பணிக்கு கருங்கற்கள் தேவைப்பட்டதால், கல்குவாரியை மட்டும் ஏலம் விட அரசு அனுமதி வழங்கியது. மாவட்டத்தில் உள்ள 39 கல்குவாரிகளில் 12 குவாரிகள் மட்டும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஏலம் போனது. மீதியுள்ள 27 கல்குவாரிகளின் ஏலத்தொகை அதிகமாக இருந்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாக யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில் 4வது முறையாக கல்குவாரிகளுக்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் நடந்தது. கனிமம் மற்றும் புவியியல்துறையின் இணை இயக்குநர் ஆறுமுகநயினார் தலைமையில் ஏலம் நடந்தது. அரசியல் கட்சியினர் ஏலம் எடுப்பதற்காக குவிந்திருந்தனர். காலை 11.30 மணிக்கு துவங்கிய ஏலம் மாலை 6 மணி வரை நடந்தது. இதில் கொண்டையம்பட்டி, ராசுக்கல்பட்டி, அய்யம்பட்டி, சொக்கலிங்காபுரம், சொக்கம்பட்டி உள்ளிட்ட 7 குவாரிகள் மட்டும் மொத்தம் ரூ.5 கோடியே 61 லட்சத்திற்கு ஏலம் போனது. மீதியுள்ள 20 குவாரியின் ஏலத்தொகை அதிகமாக இருந்ததால், யாரும் எடுக்க முன்வரவில்லை.

Related Stories: