பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட வந்த எம்எல்ஏ, ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

காட்டுமன்னார்கோவில், ஜன. 21: காட்டுமன்னார்கோவிலில் நிவர், புரெவி புயலை தொடர்ந்து கனமழையின் காரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியது. இதை தொடர்ந்து நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் முழுமையாக பார்வையிட்டு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, முருகுமாறன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டனர். முன்னதாக உத்தமசோழகன், சப்பானிக்குட்டை, வீரானந்தபுரம் பகுதி பயிர்களை பார்வையிட்டனர். இதையடுத்து திருநாரையூர் வந்தபோது, அழிந்துபோன நெல் பயிருடன் மாவட்ட ஆட்சியரையும், சட்டமன்ற உறுப்பினரையும் விவசாயிகள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருநாரையூரை தொடர்ந்து அருகேயுள்ள வவ்வால்தோப்பு, பிள்ளையார்தாங்கல் கிராமத்துக்குச் சென்றபோது அங்கிருந்த விவசாயிகளும் ஆட்சியரையும், சட்டமன்ற உறுப்பினரையும் முற்றுகையிட்டு பாதிப்பு குறித்து முறையிட்டனர்.

Related Stories:

>