குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் தோல் வியாதிகளுக்கு நவீன லேசர் சிகிச்சை ₹23.50 லட்சத்தில் புதிய உபகரணங்கள்

நாகர்கோவில், ஜன.21 : கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் தோறும் 200 முதல் 300 பேர் புறநோயாளிகளாக வருகிறார்கள். 30 முதல் 40 பேர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு தற்போது ₹23.50 லட்சம் செலவில் நவீன லேசர் கதிர்வீச்சு சிகிச்சை கருவிகள் வந்துள்ளன. இந்த லேசர் கருவிகள் சிகிச்சை முறையை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி நேற்று தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் கூறுகையில், தோல் சம்பந்தமான நவீன அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள கார்பன்டை ஆக்சைடு லேசர் கருவி வந்துள்ளது. இதன் மதிப்பு ₹10 லட்சம் ஆகும். இதன் மூலம் தோல் பிரச்னைகளுக்கான அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும்.

 இதே போல் தழும்புகள், கரும்புள்ளி, தேவையில்லாத பகுதியில் முடி வளருதல், குழந்தைகளுக்கான சிவப்பு மச்சம் உள்ளிட்டவற்றை எல்லாம் சரி செய்யும் வகையில் ஐபிஎல் லேசர் கருவி வந்துள்ளது. முகப்பரு, மருக்கள், முக சுருக்கங்கள் போன்வற்றை சரி செய்ய டையோடு லேசர் கருவி உள்ளது.  தமிழகத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிறகு, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தான் இந்த நவீன கருவிகள் வந்துள்ளன என்றார்.

நிகழ்ச்சில் தோல் சிகிச்சை துறை தலைவர் புனிதவதி வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், துணை முதல்வர் டாக்டர் லியோ டேவிட், உறைவிட மருத்துவர்கள் டாக்டர் ஆறுமுக வேலன், டாக்டர் விஜயலட்சுமி, நரம்பியல் துறை தலைவர் டாக்டர் கிங்ஸ்லி, பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பிரின்ஸ் பயஸ், முன்னாள் தோல்துறை தலைவர் டாக்டர் பிரவீன், தோல்துறை உதவி பேராசிரியர்கள் டாக்டர்கள் மணிவண்ணன், நிவேதா, கண்ணன், பிரேம்சந்த், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: