உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

காங்கயம், ஜன. 21: காங்கயம் அருகே படியூரில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   திருப்பூர் மாவட்டம் காங்கயம்-திருப்பூர் ரோடு படியூர் அருகே உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, திருப்பூர் மாவட்ட செயலாளர் கங்காசக்திவேல் கலந்து பேசினர்.  இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:  தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களின் மீது உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான திட்டத்தை சாலையோரமாக புதைவடகம்பியாக அமைக்க நடிக்கை எடுக்க வேண்டும். முடிவடையும் நிலையில் உள்ள திட்டங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்திற்கு ஒவ்வொரு முறையில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அரசாணை எண் 54 அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீடாக தற்போது ரூ.50 ஆயிரம் அறிவித்துள்ளதை உயர்த்தி, ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகள் மீது 38 வழக்குகளை போட்டு உள்ள தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.   இக்கோரிக்கை குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்க வேண்டும். அவ்வாறு தீர்வு வழங்காவிட்டால், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் காங்கயம் சுற்று பகுதியில் உள்ள விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: