பழநி கோயிலின் சார்பில் சித்த மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் பொதுமக்கள் மகிழ்ச்சி

பழநி, ஜன. 21: பழநி நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவனை செயல்பட்டு வந்தது. சித்த மருத்துவக் கல்லூரி துவங்க பழநி புறநகர் சிவகிரிப்பட்டி ஊராட்சியில் 40 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. ஆனால், அதன்பின் சித்த மருத்துவமனை சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சித்த மருத்துவமனை இல்லாததால் பழநியில் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தி பேசினார்.

இதன்பயனாக பழநியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு இசைவு தெரிவித்தது. இதன் காரணமாக பழநி தாலுகா அலுவலக பழைய கட்டிடத்தில் சித்த மருத்துவமனை உள்நோயாளி சிகிச்சை பிரிவு கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்டது. ஆனால், சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் நிர்வாகத்தின் கீழ் சித்த மருத்துவக் கல்லூரி துவங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி சிவகிரிப்பட்டி ஊராட்சி, தட்டான்குளத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிக்கான இடம் மற்றும் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சித்த மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு பழநி கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்படும். கோயில் நிர்வாகத்தின் மூலம் கட்டிடங்கள் கட்டப்பட்டு, சித்த மருத்துவக் கல்லூரி, போகர் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பழநி மக்களின் நீண்டகால கோரிக்கை புத்துயிர் பெற்றுள்ளது. தொடர்ந்து சித்த மருத்துவக் கல்லூரி துவங்குவதற்காக உருவாக்கப்பட்ட அதன் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர், தலைவர் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, அரசு சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரன் உள்ளிட்டோருடன் பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: