தாராபுரத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்ட இடத்தில் கே.எஸ். அழகிரி ஆய்வு

தாராபுரம், ஜன. 21: தாராபுரத்தில் ராகுல் காந்தி  பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ். அழகிரி பார்வையிட்டார்.  தாராபுரத்தில் ராகுல் காந்தி  பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ். அழகிரி பார்வையிட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை செய்யப்பட்டது. இப்பணிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பிரசார கூட்டத்திற்கு கிராமப்புற மக்களை அழைக்கவும், ராகுல் காந்தியின் வருகையை தெரிவிக்கவும் கலை குழு பயணத்தை நேற்று துவக்கி வைத்தார். முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் மிகச்சிறந்த ஆட்சியை கொடுத்திருப்பதாக கூறுகிறார். அதில் எனக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. உலகமே வெட்கி தலைகுனியும் அளவுக்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்துள்ளது. இதில் அ.தி.மு.க. பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களை தப்ப வைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அ.தி.மு.க. அரசு உடந்தையாக இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அ.தி.மு.க. அரசுக்கு ஓரளவு நல்ல பெயர் இருந்திருக்கும்.

ஆனால், அவர்களுக்கு பாதுகாப்பாக, துணையாக ஒரு அரசு இருக்கிறது என்று சொன்னால் அதைவிட கேவலமான ஒரு செயல் இருக்க முடியாது. மேலும் முதலமைச்சர் மீது ரூ.2500 கோடி ஊழல் செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் இதில் ஆதாரம் உள்ளது என வழக்கை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், முதலமைச்சர் தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்று அதற்கு தடையாணை வாங்கியுள்ளனர். மத்திய அரசின் கட்டுக்குள் உள்ள சி.பி.ஐ. அந்த தடை ஆணையை உடைப்பதற்கு 2 ஆண்டுகளாக எந்த ஒரு முயற்சியையும் செய்யவில்லை. முதலமைச்சரை பாதுகாக்க சி.பி.ஐ.க்கு மத்திய அரசு ஏன் துணை போகிறது என தெரியவில்லை. சட்டத்தின் ஆட்சி நடப்பதாக மோடி சொல்கிறார். சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார், அப்படி என்றால்  சி.பி.ஐ. முதலமைச்சர் மீது உள்ள தடை ஆணையை ஏன் உடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை?. இந்த இரண்டு கேள்விகளுக்கு முதலமைச்சரும், பா.ஜ.வும் பதில் சொல்ல வேண்டும். மேலும்  உள்துறை அமைச்சகமும் பதில் சொல்ல வேண்டும். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால், மக்களுக்கு சி.பி.ஐ.யின் மீதான நம்பகத்தன்மை மேலும் குறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு, அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீ வல்ல பிரசாத், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், தாராபுரம் எம்.எல்.ஏ. காளிமுத்து உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>