ஊட்டியில் மாறுபட்ட காலநிலையால் கேரட் அழுகல்: விவசாயிகள் பாதிப்பு

ஊட்டி,ஜன.21: நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக அக்டோர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன் பின் நவம்பர் 2வது வாரத்தில் இருந்து மார்ச் மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இம்முறை டிசம்பரில் சில நாட்கள் பனி காணப்பட்டது. அதன் பின் பொங்கல் பண்டிகை வரை பருவமழை நீடித்தது. இதனால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தற்போது மழை முற்றிலும் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெயிலும் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பருவம் தவறி இம்மாதம் 2வது வாரம் வரை பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பினாலும், தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாய பயிர்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். இந்நிலையில் ஜனவரி வரை நீடித்த மழை மற்றும் பகலில் நிலவும் வெயில் உள்ளிட்ட காலநிலைகளால் கேரட்டில் அழுகல்  அதிகரித்துள்ளது. தற்போது கேரட் விலையும் சரிந்துள்ள நிலையில், அழுகல் அதிகரித்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிறு குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>