×

அரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு

கோவை, ஜன. 21:  கோவை சங்கனூர் அருகே அரிய வகை பாம்பு என கருதப்படும் விஷமற்ற மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்கப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்டது.  கோவை சங்கனூர் ஒத்த புளியபுரம் பகுதியில் தர்மராஜ் என்பவரின் நண்பர் வாகனத்தில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், பாம்பு பிடிக்கும் நிபுணர் சஞ்சய்-க்கு தகவல் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த சஞ்சய் வாகனத்தில் சிக்கியிருந்த பாம்பை மீட்டார். பாம்பிற்கு லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. அதற்கு உரிய சிகிச்சை அளித்து வனத்தில் விடுவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட பாம்பு மிகவும் அரிய வகை பாம்பு எனவும், முதல் முறையாக கோவையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பாம்பு பிடிக்கும் நிபுணர் சஞ்சய் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மஞ்சள் கோடு வரியன் (எல்லோ ஸ்பாடட் உல்ப் ஸ்நேக்) மிகவும் அரிய வகை பாம்பு. விஷ தன்மையற்றது. இவை, மகாராஷ்டிராவில் அதிகளவில் காணப்படுகிறது. கோவை ஆனைகட்டியிலும் தென்பட்டதாக தகவல்கள் உள்ளது. முங்கில் காடுகள், குளிர்ச்சியான பகுதிகளில் வாழ்பவை. குட்டை வகை பாம்பு. 2.5 அடி நீளம் வளரும். 6 முதல் 7 முட்டையிடும். கோவை சங்கனூரில் மீட்கப்பட்ட பாம்பிற்க 4 வயது இருக்கும். 2 அடி நீளம் இருந்தது. மழைநீரில் அடித்து வந்து இருக்கலாம். முதல் முறையாக கோவை மாவட்டத்தில் இவ்வகை பாம்பு மீட்கப்பட்டுள்ளது. பாம்பிற்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினர் ஆலோசனையின் பேரில், மருதமலை அடுத்த ஆனைமடுவு வனத்தில் பாம்பு விடுவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்