×

துடியலூரில் இருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ் மீண்டும் இயக்கம்

பெ.நா.பாளையம், ஜன.21: துடியலூர் அருகே நிறுத்தப்பட்ட டவுன் பஸ் மீண்டும் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்காந்திபுரம், உக்கடம் மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளுக்கு துடியலூர், என்.ஜி.ஜி.ஓ. காலனி வெற்றிலைக்காளி பகுதியில் இருந்து 38 ஏ மற்றும் 4 ஏ இரண்டு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அதிகாலை 5.15 மணி முதல் இரவு 10:30 வரை சுமார் எட்டு முறை எதிர் எதிராக சென்று வந்தன. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்பவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்து வந்தனர். மேலும், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, வெற்றிலை காளிபாளையம் போன்ற கிராமங்களுக்கு இந்த இரண்டு டவுன் பஸ்கள் மட்டுமே சென்று வந்தன.கொரோனா ஊரடங்கின் பிறகு ஒரு பஸ் மட்டும் வந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக 38 ஏ மற்றும் 4 ஏ இரண்டுமே எந்த காரணமும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால், வேலைக்கு செல்பவர்கள் 3 முதல் 4 கி.மீ. தூரம் நடந்து சென்று வேறு பஸ் ஏற வேண்டி இருந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதுகுறித்த விரிவான செய்தி கடந்த 12ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து, போக்குவரத்து அதிகாரிகள், நிறுத்தப்பட்ட 38 ஏ மற்றும் 4 ஏ இரண்டு டவுன் பஸ்களும் மீண்டும் அதே வழிதடங்களில் இயக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால், அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்னனர்.

Tags : Dudiyalur ,Gandhipuram ,
× RELATED காந்திபுரம், சிங்காநல்லூரில் மல்டி லெவல் பார்க்கிங்