அன்னூர் அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் இலவச பொருட்கள் வழங்கியதில் தள்ளுமுள்ளு

அன்னூர், ஜன.21: அன்னூர் அருகே கரியாம்பாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்,  மைல்கல் பகுதியில் அ.தி.மு.க. அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு பங்கேற்பதற்காக அன்னூர் பகுதி மக்களுக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் புடவை தருவதாக அ.தி.மு.க.வினர் உறுதி அளித்தனர். இதற்காக டோக்கன்களை வீடு, வீடாக சென்று வழங்கினர். இதை நம்பி 2000க்கும் மேற்பட்டோர் கரியாம்பாளையம் விழா திடலில் குவிந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கூட்டம் துவங்கி அ.தி.மு.க.வினர் அமைச்சர் வேலுமணிக்காக காத்திருந்தனர். இரவு 11:30 மணி வரை அவர் வரவில்லை. பொதுமக்களும் காத்திருந்தனர். அப்போது அமைச்சர் பொதுக்கூட்டத்திற்கு வரமாட்டார். மைல்கல் பகுதியில் கட்சி அலுவலகத்தை மட்டுமே திறந்து வைக்கிறார் என்ற தகவல் பரவியது. இதற்கிடையே, அ.தி.மு.க.வினர் மற்றும் போலீசார் மைல்கல் பகுதிக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றனனர். இலவச பொருள் வாங்க கொடுக்கப்பட்ட டோக்கனை கையில் வைத்து காத்திருந்த மக்கள், கட்சியினர் கிளம்பி செல்வதை பார்த்து திகைத்து நின்றனர். கூட்ட முடிவில் டோக்கன் பெற்றவர்களில் சிலருக்கு மட்டுமே ஹாட் பாக்ஸ் மட்டும் புடவை வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், இலவச பொருள் வாங்க பொதுமக்களிடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பலர் முண்டியடித்து சென்று கீழே விழுந்ததால் காயம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: