ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.2.60 கோடி மோசடி

கோவை, ஜன.21: கோவை சர்க்கார் சாமக்குளம் அருகே உள்ள  நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், கோவை மாவட்ட  குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம்  பழநியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (37). இவர், சரவணம்பட்டியில் உள்ள தனியார்  நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், தான் ஆன்லைன் வர்த்தகம்  செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும்  கூறினார். இதை நம்பி நான் உட்பட பலர் இவரிடம் பணத்தை முதலீடு செய்தோம்.  ஆனால், அவர் கூறியது போல் பணம் தரவில்லை. பணம் தராமல் மோசடி செய்த ஜெகதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். அதன்படி, புகார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டு வரை  ஜெகதீஷ் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை  சேர்ந்தவர்களிடம் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.2 கோடியே 60  லட்சத்து 50 ஆயிரம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.  இதையடுத்து ஜெகதீஷ் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவிலில் நேற்று கைது செய்தனர்.

Related Stories:

>