629 முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 629 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.    இந்தியாவில் கொரோனாவுக்கான கோவிஷீல்டு முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை உள்பட 5 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 16ம் தேதி முதல் இந்த 5 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் மூன்று நாட்களில் நூறு நபர்களுக்கு கீழ் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 629 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து கலெக்டர் கதிரவன் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பவானி மற்றும் கோபி அரசு மருத்துவமனை, சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய ஐந்து இடங்களில், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. டாக்டர்கள், நர்ஸ், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என 13,800 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,901 தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 216 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை மொத்தம் 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 404 பேர் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் ஆவர். 225 பேர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருபவர்கள் ஆவர். இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

Related Stories: