×

கன்னட அமைப்பினர் சேதப்படுத்திய பெயர் பலகைகள் தமிழக எல்லைக்குள் நடும் பணி தீவிரம்

சத்தியமங்கலம்:   தமிழக-கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் சேதப்படுத்திய பெயர் பலகைகளை மீண்டும் தமிழக எல்லைக்குள் நடும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் ராமாபுரம் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் கடந்த 10ம் தேதி நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பெயர் பலகைகளை கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இது சம்பந்தமாக தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி தாளவாடி மலைப்பகுதி பையனா புரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் ஒட்டரள்ளி செல்லும் சாலையில் இருமாநில எல்லையில் வைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான வரவேற்பு பெயர் பலகைகளை மீண்டும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை, நில அளவை துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய 3 துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இரு மாநில எல்லையில் நில அளவீடு செய்து எல்லை நிர்ணயம் செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி மலைப்பகுதியில் பாரதிபுரம் அருகே உள்ள இரு மாநில எல்லையில் நெடுஞ்சாலைத்துறையின் பெயர் பலகைகள் மீண்டும் தமிழக எல்லைக்குள் நடப்பட்டன. இதேபோல் பையனாபுரம் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் சாலையில் பெயர் பலகை சேதப்படுத்தப்பட்ட பகுதியில் மீண்டும் தமிழக எல்லைக்குள் பெயர் பலகைகள் வைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : organization ,border ,Kannada ,Tamil Nadu ,
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...