ஈரோடு: ஈரோடு அசோகபுரம் லட்சுமி தியேட்டர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). மாட்டு வண்டி வைத்துள்ளார். மாட்டு வண்டியில் சுமை ஏற்றி லாரி புக்கிங் அலுவலகங்களில் துணி, நூல் மூட்டைகளை ஏற்றி இறக்குவது வழக்கம். ராஜேந்திரன் நேற்று காலை வழக்கம்போல் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பல்வேறு ஜவுளி நிறுவனங்களில் இருந்து நூல், துணி பேல்களை மாட்டு வண்டியில் ஏற்றி கொண்டு ஈரோடு மணிகூண்டு பகுதியில் இருந்து புது மஜித் வீதிக்கு செல்ல முற்பட்டார்.அப்போது, பாரம் தாங்காமல் மாடு கால் இடறி கீழே விழுந்தது. மாட்டு வண்டியில் இருந்த துணி, நூல் மூட்டைகள் மாட்டின் கழுத்தின் மீது விழுந்தது. இதில் ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து ஈரோடு டவுன், போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். சாலையில் மாடு கீழே விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.