×

அதிக பாரம் ஏற்றியதால் மாடு தடுமாறி கீழே விழுந்து பலி

ஈரோடு:  ஈரோடு அசோகபுரம் லட்சுமி தியேட்டர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). மாட்டு வண்டி வைத்துள்ளார். மாட்டு வண்டியில் சுமை ஏற்றி லாரி புக்கிங் அலுவலகங்களில் துணி, நூல் மூட்டைகளை ஏற்றி இறக்குவது வழக்கம். ராஜேந்திரன் நேற்று காலை வழக்கம்போல் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பல்வேறு ஜவுளி நிறுவனங்களில் இருந்து நூல், துணி பேல்களை மாட்டு வண்டியில் ஏற்றி கொண்டு ஈரோடு மணிகூண்டு பகுதியில் இருந்து புது மஜித் வீதிக்கு செல்ல முற்பட்டார்.அப்போது, பாரம் தாங்காமல் மாடு கால் இடறி கீழே விழுந்தது. மாட்டு வண்டியில் இருந்த துணி, நூல் மூட்டைகள் மாட்டின் கழுத்தின் மீது விழுந்தது. இதில் ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து ஈரோடு டவுன், போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். சாலையில் மாடு கீழே விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாட்டு வண்டிகளை கண்காணிக்க வேண்டும்: ஈரோடு மாநகரில் மட்டும்தான் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் உள்ளன. இந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பாரங்களை ஏற்றிக்கொண்டு சாலை விதிகளை கடைபிடிக்காமல் அனைத்து முக்கிய சாலைகளிலும் ஓட்டி சென்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். மேலும், மாடுகள் தாங்கும் பாரத்தை காட்டிலும் அதிகளவில் ஏற்றி அதனை சிரமத்திற்குள்ளாக்கி வருகின்றனர். அவ்வப்போது புளூகிராஸ் மற்றும் விலங்கு பாதுகாவலர்கள் போன்றோரால் விலங்குகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டாலும், இதுபோன்ற சில சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே, மாட்டு வண்டிகளில் அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றுவோரை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு