×

சுங்கச்சாவடி - விம்கோ நகர் சாலை அமைக்கும் பணி துவக்கம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

திருவொற்றியூர்: வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை பல கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணி முடிவடைந்த நிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து, விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் நடைபெறும் இடங்களில் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மாநகர பேருந்து, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் தேரடி, திருவொற்றியூர் மார்க்கெட் போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அலுவலகம் மற்றும் தொழிற்சாலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு போக முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். வாகனங்களும் பழுதாகி நின்று விடுகிறது. இதனால் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை பொதுமக்கள் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட விம்கோ நகர் முதல் சுங்கச்சாவடி வரை உள்ள பழுதான சாலையில் தரமான சாலை அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்து இதற்கான பணியை தற்போது துவங்கியுள்ளது. விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் ஒரு சில தினங்களில் இந்த சாலைகள் அனைத்தும் முழுமையாக போடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணியால் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த சாலையில் பெரும் சிரமத்துடன் வாகனத்தை ஓட்டிய பொதுமக்களுக்கு தற்போது இந்த சாலைகள் சீரமைக்கப்படுவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Customs - Wimco Nagar ,Motorists ,
× RELATED வால்பாறை மலைப்பாதையில் வாகனங்களை...