×

மணலி எம்எப்எல் மத்திய அரசு நிறுவனத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: வெளிமாநிலத்தவரை அழைத்து வர எதிர்ப்பு

சென்னை, ஜன.21: மணலி உரத் தொழிற்சாலையில் வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வர தமிழக ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மணலி எம்எப்எல் மத்திய அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உரம், இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த உர மூட்டைகளை கையாள 265 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தினக்கூலி உயர்த்தவில்லை. பண்டிகை கால சலுகை போன்ற எந்த பயனும் அளிக்கவில்லை. இதுகுறித்து ஒப்பந்த ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்எப்எல் தொழிற்சாலைக்கு புதியதாக வட இந்திய கூலித்தொழிலாளர்களை கொண்டுவர ஒப்பந்ததாரர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இதையறிந்த ஒப்பந்ததாரர்கள் வட இந்திய தொழிலாளர்களை நியமிக்க கூடாது. இந்த செயல் தங்களுடைய வேலை வாய்ப்பு பறிக்கக் கூடியது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட இந்திய தொழிலாளர்களை நிறுவனத்தில் பணிபுரிவதற்காக கொண்டுவர ஒப்பந்ததாரர் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது ஷிப்டில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவன வாசலில் ஒன்று கூடினர். தங்களுடைய கோரிக்கை குறித்து முடிவு சொல்லாமல் வட இந்திய ஊழியர்களை உள்ளே அனுமதிக்க விட மாட்டோம் எனக்கூறி முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் நிறுவன வாசலில் நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிறுவன அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் முடிவில் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி முடிவு எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Contract workers ,Manali MFL ,foreigners ,
× RELATED சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400...