பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்த 5 நாள் இணையவழி கருத்தரங்கு துவங்கியது

ஊட்டி, ஜன. 20: ஊட்டியில் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட வழிமுறைகள் மூலம் பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் குறித்த 5 நாள் இணையவழி கருத்தரங்கு துவங்கியுள்ளது. ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் குறித்த 5 நாள் இணையவழி கருத்தரங்கு துவங்கியுள்ளது.

இதில் நாடு முழுவதிலும் இருந்து 12 மாநிலங்களில் இருந்து பல்வேறு துறை சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் 47 பேர் பங்கேற்றுள்ளர். இதன் துவக்க விழா ஊட்டியில் நேற்று நடந்தது. முதன்மை விஞ்ஞானி ராஜா வரவேற்று பேசினார். இந்திய மண் மற்றும் நீர்வள மைய இயக்குநர் யாதவ் தலைமை வகித்து பேசுகையில், ஒருங்கிைணந்த பயிர் சத்து மேலாண்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட உருபடிவத்தின் மூலம் பயிர் மகசூலை அதிகப்படுத்த முடியும், என்றார்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குநர் வேலாயுதம்  பங்கேற்று பேசுகையில், ஒருங்கிணைந்த பயிர்ச்சத்து மேலாண்மை திட்டத்தின் மூலம் வெவ்வேறு பயிர் சூழலுக்கு ஏற்ப பயிர் உற்பத்தியை அதிகரிக்க முடியும். மாறுபட்ட உற்பத்தி முறைகளில் சரியான ஊட்டச்சத்து மேலாண்மை தேவை.  பயிர் சுழற்சிகளைப் பின்பற்றுவதன் மூலமும் மண்ணின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்த முடியும். மண்ணின் உர செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் மண் சோதனை அடிப்படையிலான உர பயன்பாடு அவசியம், என்றார். இந்திய விவசாய மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்ணியல் பிரிவு முதன்மை விஞ்ஞானி பிஸ்வாஸ் பேசுகையில், அதிகப்படியான உரங்களை பயன்படுத்துவதன் மூலம் பயிர் உற்பத்தியை அதிகரிக்க முடியாது, என்றார்.

ஊட்டி மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் கண்ணன், முறையான உரக் கொள்கையின் அவசியம் குறித்தும், நம் நாட்டில் பயிர் விளைச்சலை மேம்படுத்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தின் பங்கு குறித்து பேசினார். தொடர்ந்து பயிற்சி தொடர்பான கையேடு வெளியிடப்பட்டது. இதில் மூத்த விஞ்ஞானி ஹோம்பே கவுடா மற்றும் தொழிற்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை விஞ்ஞானி ராஜன் நன்றி கூறினார்.

Related Stories:

>