கோவை அரசு மருத்துவக்கல்லூரி, இ.எஸ்.ஐ. கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். வகுப்புகள் இன்று துவக்கம்

கோவை, ஜன. 20: கோவை அரசு மருத்துவக்கல்லூரி, இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று துவங்குகிறது. மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவக்கல்லூரிகளில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று துவங்குகிறது. இவர்களுக்கு முறையாக வகுப்புகளை பிப்ரவரி 2-ம் தேதி துவங்கலாம் என மருத்துவக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை கண்டறியும் ஆர்.டி.பி.ஆர். டெஸ்ட் செய்ய வேண்டும். ஆள் மாறாட்டத்தை தடுக்க அனைத்து மாணவர்களின் கல்வி, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் பெருவிரல் ரேகை, விழித்திரையை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் சமீபத்திய புகைப்படம் பெற வேண்டும். இவை அனைத்தையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும். பின் அனைத்து ஆவணங்களையும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று காலை 11 மணிக்கு முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு 100 இடங்கள் உள்ளது. இந்த மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியும் இன்று காலை இ.எஸ்.ஐ.யில் நடக்கிறது. கோவை அரசு மருத்துவக்கல்லூரியின் டீன் காளிதாஸ் கூறுகையில், “கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. நடப்பாண்டில், அனைத்து இடங்களும் நிரம்பியுள்ள நிலையில், நாளை (இன்று) முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்குகிறது. இவர்களுக்கு முறையாக பிப்ரவரி 2-ம் தேதி வகுப்புகள் துவங்கப்படும்.

தற்போது, மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், ஆன்லைன் மூலமாகவும் விளக்கம் அளிக்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா  டெஸ்ட் மேற்கொள்ளப்படும். மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளும் தயார்நிலையில் உள்ளது” என்றார்.

Related Stories: