×

10 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் 403 பள்ளிகள் திறப்பு

ஈரோடு, ஜன. 20:    கொரோனா  பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று  திறக்கப்பட்டு 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.தமிழகத்தில்  கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முதல்  திறக்கப்பட்டு 10 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும்  பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை என  மொத்தம் 403 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் 10 மாதங்களுக்கு பிறகு  நேற்று பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பாக மாஸ்க்  அணிந்துள்ளார்களா? என்பதை உறுதி செய்த பின்பு தெர்மல் ஸ்கேனர் கொண்டு  காய்ச்சல் உள்ளதா? என கண்டறிந்த பின்னர் வளாகத்திற்குள்  அனுமதிக்கப்பட்டனர்.

வகுப்பறைக்குள் செல்வதற்கு முன்பாக மாணவர்களுக்கு  சானிடைசர் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ள செல்ல அனுமதி  வழங்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்திலும் சமூக இடைவெளி பின்பற்றும்  வகையில் தனித்தனியாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதே போல வகுப்புகளில் 25  மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவியர்களுக்கு நோய்  எதிர்ப்பு சக்தி கொண்ட மாத்திரைகள் வழங்கப்பட்டன. விருப்பமுள்ள மாணவர்கள்  வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்பதாலும், கொரோனா பயம் காரணமாகவும் நேற்று  முழுமையான அளவில் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள  கல்வித்துறை அதிகாரிகள், வரும் நாட்களில் நிலைமை சரியாகும் என்று கூறினர்.

20,108 பேர் ஆப்சென்ட்: ஈரோடு   மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள்   திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. மாவட்டத்தில் மொத்தம்  உள்ள 403  மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பில் 29,628  மாணவ-மாணவிகளும்,  12ம் வகுப்பில் 24,650 மாணவ-மாணவிகளும் படித்து  வருகின்றனர். பள்ளிகள்  திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று 10ம் வகுப்பில்  18,512 மாணவ-மாணவிகளும்,  12ம் வகுப்பில் 15,658 மாணவ-மாணவிகள் மட்டுமே  வந்தனர். 10ம் வகுப்பில்  11,116 பேரும், 12ம் வகுப்பில் 8,992 பேரும்  என மொத்தம் 20,108  மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வராமல் ஆப்சென்ட் ஆகினர் என  பள்ளிக்கல்வித்துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : schools ,district ,
× RELATED மாவட்டத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் துவக்கம்