காணாமல் போன மகளை கண்டுபிடிக்க கார் கேட்ட பவானி மகளிர் போலீசார்

ஈரோடு,  ஜன. 20:  பவானி அருகே உள்ள  ஆர்.என்.புதூர், அமராவதி நகரை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் கூலி வேலைக்கு சென்று தனது 15 வயது மகளை காப்பாற்றி வந்தார்.  அந்தியூரில் உறவினர் வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து  வந்த மகள் கடந்த 8ம் தேதி முதல் காணாமல் போய்விட்டார். இதனால்,  அதிர்ச்சியடைந்த அந்த பெண் பல்வேறு இடங்களில் தேடியும் மகள் குறித்த எவ்வித  தகவலும் கிடைக்காததால், இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார்  செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க கார் வாடகைக்கு எடுத்து கொடுக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுள்ளனர்.இது தொடர்பாக நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அந்த சிறுமியின் தாய் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகளை காணவில்லை என்று  பவானி போலீசில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுவரை மகளை கண்டுபிடிக்கவில்லை. காணவில்லை என்று அறிவிப்பு கொடுக்க 500  துண்டறிக்கைகளை அச்சடித்து கொடுக்கும்படி போலீசார் கேட்டனர். அதன்படி  அச்சடித்து கொடுத்துள்ளேன். காணாமல் போன மகளை தேடிச்செல்ல கார்  எடுத்துவரும்படி போலீசார் கூறுகின்றனர். கணவரை பிரிந்து வாழும் நான், கூலி  வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறேன். கார் வாடகைக்கு எடுத்து  கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே மகளை  கண்டுபிடித்து ஒப்படைக்க போலீசாருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: