10 மாதங்களுக்கு பிறகு தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்

தேனி. ஜன. 20: தேனி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 218 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது வகுப்பு தோழர்களை பார்த்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர்.

இந்தியாவில், கடந்தாண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. நோய்தொற்று படிப்படியாக குறையத் தொடங்கிய நிலையில், தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோ னா தொற்று குறைய தொடங்கியதையடுத்து 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 218 பள்ளிகள் திறக்கப்பட்டன. தேனி-அல்லிநகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாணவர்களுடன் பெற்றோர்களும் வரவேண்டும்; பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அனுமதி கடிதம் தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பெற்றோர்களை அழைத்து வராத மாணவ, மாணவியர் அழைத்து வர அறிவுறுத்தப்பட்டனர். அனுமதி கடிதத்துடன் வந்த மாணவ, மாணவிகளுக்கு சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி, உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தி வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறைகளில் பாடங்கள் நடத்தப்படவில்லை. கொரோனா விழிப்புணர்வு குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. வகுப்பறைகளில் அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற நிலையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் 20க்கும் குறைவான மாணவர்களே வந்திருந்தனர். இதனால், போதிய இடைவெளியுடன் இருந்தனர். அதே சமயம் தனியார் சுயநிதி பள்ளிகளிலும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் சுமார் 50 சதவீத மாணவ மாணவியர் வருகை தந்திருந்தனர். மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு 30 சதவீத அளவே மாணவ மாணவிகள் வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது வகுப்பு தோழர்களை பார்த்த மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர்.

Related Stories: