கம்பத்திலிருந்து நெடுங்கண்டம், கட்டப்பனைக்கு அரசு பஸ் இயக்குவது எப்போது ஜீப்புகளில் அதிக கட்டணம் கொடுத்துச் செல்லும் தொழிலாளர்கள்

கம்பம், ஜன. 20: கம்பத்திலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை, நெடுங்கண்டத்திற்கு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்பில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு ஆகியவை கேரளாவை இணைக்கும் முக்கிய பகுதிகளாக உள்ளன. கம்பத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் கம்பம்மெட்டும், 24 கி.மீ தொலைவில் குமுளியும் உள்ளது. ஊரடங்கால் இந்த சாலைகள் வழியாக கேரள செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின், கடந்த ஜன.7 முதல் குமுளி சாலையில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், கம்பத்திலிருந்து அதிக வியாபார தொடர்புடைய கேரள மாநிலம் கட்டப்பனை மற்றும் நெடுங்கண்டத்திற்கு இதுவரை அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், கட்டப்பனைக்கும், நெடுங்கண்டத்திற்கும் செல்லும் தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் ஆட்டோகளிலும், ஜீப்புகளிலும் அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர். முன்பு கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கட்டப்பனைக்கு தினசரி ஒரு அரசு பஸ் 4 முறையும், நெடுங்கண்டத்திற்க்கு 2 பஸ்கள் 8 முறையும் இயக்கப்பட்டன.

கடந்த 10 மாதமாக கொரோனாவை காரணம் காட்டி அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டாலும், கேரளாவுக்கு செல்ல இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

கம்பம் பகுதியிலிருந்து ஏராளமானோர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தூக்குப்பாலம், கூட்டாறு, நெடுங்கண்டம், உடும்பன்சோலை, ஆமையாறு மற்றும் கட்டப்பனைக்கு பணி நிமித்தமாகவும், தோட்டங்களை பராமரிக்கவும், வைத்தியத்திற்கும், தனது உறவினர்களின் நன்மை தீமைக்கும் சென்று வருகின்றனர். ஆனால், கம்பத்திலிருந்து பஸ் வசதி இல்லாததால், 4 மடங்கு கட்டணம் கொடுத்து ஜீப்புகளில் சென்று வருகின்றனர். எனவே, கம்பத்திலிருந்து கேரள பகுதியில் உள்ள கட்டப்பனை, நெடுங்கண்டத்திற்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இடுக்கி மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தால் மட்டுமே கம்பத்திலிருந்து கேரளாவுக்குள் அரசு பஸ் இயக்க முடியும்’ என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் கமருதீன் கூறுகையில், ‘கம்பத்திலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கேரளாவிற்க்கு தோட்ட வேலைக்கு சென்று வருகின்றனர். கேராளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கம்பத்திற்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இவர்களுக்கு முறையான பஸ் வசதி இல்லாததால் அதிக கட்டணம் கொடுத்து வந்து செல்கின்றனர். எனவே, தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கலந்து பேசி, கம்பத்திலிருந்து நெடுங்கண்டம், கட்டப்பனைக்கு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>