கால்வாய்கள் அடைப்பால் மழைநீர் வெளியேற வழியில்லை சகதியில் சிக்கும் பாதசாரிகள்

காரைக்குடி, ஜன.20:  நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் முறையாக வெளியேற வழியில்லாததால் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்வோர் மீது வாகனங்களில் செல்வோர் தண்ணீரை மேலே அடித்து விட்டும் செல்லும் நிலை உள்ளது. காரைக்குடி நராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. மழைநீர் முறையாக வெளியேற கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கால்வாய்கள் வழியாக செல்லும் மழைநீர் ஒவ்வொரு வார்டுகளில் உள்ள குளங்களில் தேங்கி அங்கிருந்து காரைக்குடி கண்மாய்க்கு செல்லும்.

தவிர மழைநீர் சாலைகளில் தேங்கி அரிமானம் ஏற்படுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்கவே மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இக்கால்வாய்கள் தற்போது மண், குப்பைகள் அடைத்தும் ஒரு சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் சிக்கி உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான அமைப்புகள் இல்லாததால் இக்கால்வாய்கள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது.  கால்வாய்கள் முறையாக சுத்தப்படுத்துவது கிடையாது. அப்படியே சுத்தப்படுத்தினாலும் கால்வாய்களில் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகளை அதன் அருகிலேயே எடுத்து போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு மழை பெய்யும் போது மீண்டும் அனைத்து கழிவுகளும் கால்வாய்க்குள்ளேயே விழுகின்றன. நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளின் முன்புறப்பகுதி முழுவதும் கால்வாய்களின் மேலேயே ஆக்கிரமித்து கட்டியுள்ளனர்.

இதனை அகற்றி கால்வாய்களை சுத்தப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் பல ஆண்டுகளாக எடுக்கவில்லை. இதனால் மழைநீர் முறையாக வெளியேற முடியாமல் கல்லூரி சாலை, பஸ் ஸ்டாண்டு முதல் ரயில்வே ஸ்டேசன் வரை செல்லும் 100 அடி சாலை என நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்வோர் மீது கார், பஸ் போன்ற வாகனங்கள் சேறுடன் கலந்த தண்ணீரை மேலே அடித்து விட்டு செல்லும் நிலை உள்ளது. சில இடங்களில் மழைநீர் சாலைகள் முழுவதும் தேங்கி கிடப்பதால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் மக்கள் கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. தவிர மழைநீர் தேங்குவதால் நல்லநீரில் வளரக்கூடிய கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளன.

Related Stories: