வடலூர், டிச.20: குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அன்னதானம்பேட்டையை சேர்ந்த 17 வயது மாணவர் பிளஸ்2 பயின்று வருகிறார். இவருக்கும் மற்றொரு பள்ளியில் பயிலும் பச்சாரப்பாளையம் மாணவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 16ஆம்தேதி பள்ளி முடிந்து பிளஸ்2 மாணவர் அரசு பேருந்தில் ஏறி ஊருக்கு புறப்பட்ட நிலையில், பாச்சாரப்பாளையம் மாணவர் உள்பட 15 பேர் அவரை கீழே இறக்கி, தாங்கள் வந்த பைக்கில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஒரு ஓடையில் வைத்து பிளஸ்2 மாணவரை சாதி பெயரை சொல்லி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து மாணவரின் தாய் அளித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் பாச்சாரப்பாளையத்தை சேர்ந்த 16 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கேரி வி.சிறுத்தை கட்சியினர் போராட்டம் அறிவித்தனர்.
இந்த நிலையில் கடலூர் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தலைமறைவாக இருந்த பாச்சாரபாளையத்தைச் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25), பார்த்திபன் (19) மற்றும் 16 வயதுடைய மாணவன் உட்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன் தலைமையில் குறிஞ்சிப்பாடி தொகுதி விசிக செயலாளர் ஜெயக்குமார், நகர செயலாளர் பாலமுருகன் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், நிர்வாகிகள் நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணனை சந்தித்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும் கைது செய்ய கோரிக்கை விடுத்தனர். அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலில் ஈடுபடாமல் அனைவரும் கலைந்து சென்றனர்.
