தரமற்றதாக வழங்கப்பட்டதால் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்

கமுதி, ஜன.20: கமுதியில், தரமற்ற ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. கமுதியில், 4 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சந்தைபேட்டை பகுதியில் உள்ள 3ம் எண் கொண்ட ரேஷன் கடையில் நேற்று அரிசியும் மற்ற பொருட்களும் வழங்கப்பட்டன. 15ம் வார்டு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பதாரர்கள் ரேஷன் அட்டை வைத்துள்ளனர். இந்த வார்டில் உள்ள காளியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வந்திருந்தனர்.

அப்போது வழங்கப்பட்ட ரேஷன் அரிசி மிகவும் தரமற்றதாக இருந்ததால், ஆத்திரமடைந்த மக்கள் ரேஷன் கடை முன்பே 100 கிலோவிற்கு மேலான அரிசியை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று செவ்வாய்கிழமை வாரச்சந்தை என்பதால், சந்தைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் செல்ல முடியாமல் அப்பகுதி முழுவதும் நீண்டநேரம் பரபரப்புடன் காணப்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரமான அரிசியை வழங்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிட மாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் தென்னரசு ஆகியோர் விரைந்து வந்து, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதி மக்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். நாங்கள் இந்த அரிசியை தான் சமைத்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் போது கெட்ட வாடை வருகிறது என்றும், மேலும் சீனி, பருப்பு போன்ற பொருள்கள் அளவு குறைவாக வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.  இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது. நாளை உங்களுக்கு தரமான அரிசி வழங்கப்படும் என்றும் உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: