சர்வர் பழுதால் சரிவர இயங்கவில்லை பயோ மெட்ரிக் மிஷின்களை ஒப்படைக்கும் போராட்டம்

ஒட்டன்சத்திரம், 20: ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் 121 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் பதிவு இயந்திரத்தின் சர்வர் கடந்த 10 நாட்களாக சரிவர கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் வழக்கம்போல் அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்டைவை வழங்கவும்  ஒரு கார்டுதாரருக்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகியது. இதனால் ஊழியர்களுக்கும், கார்டுதாரர்களுக்கும் இடையே வீண் வாக்குவாதம், பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊழியர்கள், பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் நேற்று ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழுதான மிஷின்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் வட்ட வழங்கல் அலுவலர் நந்தகோபாலிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊழியர்கள் கூறுகையில், இந்த மாதத்திற்கு மட்டும் பழைய முறைப்படி நோட் மூலம் வரவு வைக்க அனுமதி வழங்க வேண்டும். அடுத்த மாதம் முதல் பயோமெட்ரிக் மிஷினில் பதிவு செய்ய முறையான நெட்வொர்க் வசதி ஏற்படுத்தி தருவதுடன், பழுதான மிஷின்களையும் உடனடியாக பழுது நீக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதேபோல் பழநி வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் மிஷின்களை அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: