ரெட்டியார்சத்திரம் அரண்மனைபுதூரில் ரயில்வே சப்வேயை கோட்ட மேலாளர் ஆய்வு

ஒட்டன்சத்திரம், ஜன. 20: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சிக்குட்பட்டது அரண்மனைபுதூர். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கோயில் விழாக்களுக்கும், மயானத்திற்கும் மிக அருகிலுள்ள பாறையூருக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த ஊரில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டுக்கல், புதுச்சத்திரம், ஒட்டன்சத்திரம் செல்ல அரண்மனைபுதூர் வழியாகத்தான் வர வேண்டும். இதற்கிடையே இரு ஊருக்கும் இடையே கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரயில்வே சப்வே அமைக்கப்பட்டது. தொடர்மழை காரணமாக இந்த ரயில்வே சப்வே முழுவதும் தண்ணீர் தேங்கி இரு ஊர் மக்களும் ஊரை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து நேற்று முன்தினம் இரவு திமுக மாநில துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ, எம்பி வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி ஆகியோர் பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நேற்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் அரண்மனை புதூரில் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வே இடத்தில் மாற்று பாதை ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவித்தார்.

Related Stories: